இலங்கை
Typography

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலினூடாக நியமிக்கப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு முடிவு செய்துள்ளது. 

அதற்கு முன்னதாக அவர்களுடன் பேச்சு நடத்தப்பட இருப்பதோடு அவர்களின் முடிவுக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தவிர சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தயாசிறி ஜயசேகர மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது கட்சியில் ஒரு காலையும் வேறு கட்சியில் இன்னொரு காலையும் வைத்திருப்பவர்களுக்கு இனிமேல் கட்சியில் இடமில்லை. கட்சியைத் துப்புரவு செய்து பலமான கட்சியாக மேம்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.தே.கவில் இணைந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து செயற்படாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் குறித்த பட்டியல் மத்திய குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இவர்களுடன் முதலில் கலந்துரையாட இருக்கிறோம். உடன்பாடு ஏற்படாவிட்டால், அவர்களுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதிக்குத் துரோகம் செய்து வேறுகட்சியில் இணைந்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சு.க உறுப்பினர்களுக்குப் பதில் கூற வேண்டும்.

அரசியல் எதிர்காலம் நிறைவடைந்தவர்களைத் தான் ஜனாதிபதி தேசிய பட்டியலினூடாக நியமித்தார். வேறு கட்சியில் உறுப்புரிமை பெறல், கட்சி முடிவுக்கு எதிராக செயற்படல் போன்ற அம்சங்களின் பிரகாரம் இவர்களுக்கு எதிராக செயற்படலாம். யாரையும் கட்சியை விட்டும் நீக்க இது வரை முடிவு செய்யப்படவில்லை.

செப்டம்பர் 3ஆம் திகதி நடைபெறும் கட்சி சம்மேளனத்தில் முக்கிய கொள்கை ரீதியான முடிவுகள் அறிவிக்கப்படும். 5 வருடத்திற்கு ஒரு தடவை தெரிவாகும் அரசுகளினாலோ அதிகாரிகளினாலே 50 வருடங்களுக்கு மாற்ற முடியாதவாறு நிரந்தரமான கொள்கைக்திட்டமொன்றும் வெளியிடப்படும். அமைச்சுக்கள் விஞ்ஞான பூர்வமாக நியமிக்கப்பட வேண்டும். மோசடிகளுடன் தொடர்புள்ளவர்கள் தொடர்பிலும் கொள்கை முன்வைக்கப்படும்.

தனது எதிர்காலம் குறித்து அரசியல் முடிவுகளைக் கட்சி எடுக்கக்கூடாது என ஜனாதிபதி கூறியுள்ளார். அதனால், பயமின்றிக் கட்சியைப் பலப்படுத்தும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் கட்சி மேலும் பலப்படுத்தப்படும். சு.கவின்ஆதரவு இன்றி எந்தக் கட்சியாலும் வெல்ல முடியாது என்பதை பலரும் உணர ஆரம்பித்துள்ளனர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS