இலங்கை
Typography

ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் பாராளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

“எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருப்பதாலேயே 2020ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது முதல் காலாண்டுக்கான கணக்குவாக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனால் அரசாங்க நிதி எந்த விதத்திலும் மோசடியாகப் பயன்படுத்தப்படாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கேள்வியொன்றுக்கு பதிலளிக்கம் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2019ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருப்பதால், 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது, கணக்கு வாக்கறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதனால் அரசாங்க நிதி எந்த விதத்திலும் தவறான முறையில் பயன்படுத்தப்படாது. கணக்குவாக்கறிக்கைக்கு அமைய ஒதுக்கப்படும் நிதியை அரச சுற்றுநிருபங்களுக்கு அமையவே பயன்படுத்த முடியும்.

1988ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த உடனேயே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் வரவு- செலவு திட்டத்தை சமர்பித்த பின்னரே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருந்தன. ஆனால் இப்போது அந்த அதிகாரங்கள் பாராளுமன்றத்திடமே இருக்கின்றது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்