இலங்கை
Typography

கறை படியாத, ஊழல் மோசடியற்ற புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்களின் ஆசீர்வாதமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் ஆதரவும் தனக்குக் கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

குருநாகலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ‘சஜித்தை ஆதரிப்போம்’ கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “பொது மக்களை மன்னர்களாக்கும் வெற்றிப்பயணத்தை நாம் ஊவாவில் ஆரம்பித்து இப்போது குருநாகலுக்கு வந்துள்ளோம். நவம்பர், டிசம்பர் மாதத்தில் மீண்டும் சாதாரண மக்களின் அரசை நாம் நிறுவுவோம்.

குடும்ப ஆதிக்கமும், குடும்ப ஆட்சியும் எம்மிடம் கிடையாது. எனது ஒரே ஆதிக்கம் நாட்டின் குடியுரிமையாகவுள்ளமைதான். இளைய சமூகத்திற்கு புதிய அபிவிருத்தி நோக்குடனும் தொழில்நுட்பத்துடனும் கூடிய வாய்ப்புகளை உருவாக்குவோம். இரண்டுமுறை சிந்திக்காது சஜித்தை தெரிவுசெய்யுமாறு நான் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

மக்களின் தோலின் மீதேறிச் சென்று தமது சொகுசு வாழ்வை உறுதிப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். எமது நாட்டை ஒரு குடும்பம் சொந்தமாக்கிக்கொள்ள பார்க்கின்றது. இந்த நாடு ஒரு குடும்பத்துக்கும் ஒரு பரம்பரைக்கும் சொந்தமானதல்ல. சாதாரண குடிமக்களுக்குதான் இந்த நாடு சொந்தம்.

பெண்களை நாம் பாதுகாக்க வேண்டும். பெண்கள் நாட்டின் முதுகெலும்பாகும். இந்த நாட்டின் அனைத்து வீடுகளிலும் வசிக்கும் பெண்களைப் பலப்படுத்த கணவன் வீட்டுக்கு கொண்டுவரும் வருமானத்தை மூன்று மடங்காக்க வேண்டும். அதேபோன்று பெண்களின் சுயதொழிலை உறுதிப்படுத்த வேண்டும். வாழ்க்கைத்தரம் உயரும் போதும் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கப்பதே ஒரே தீர்வாகும். நாட்டின் ஜீவநாதமான பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாக அது இருக்கும். 

சிலர் பெண்களை பாதுகாப்போமெனக் கூறுகின்றனர். அன்று உள்ளூராட்சி உறுப்பினர்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தபோது வேறு திசையில் பார்த்துக்கொண்டு அதனை வலுப்படுத்தியவர்களும் வெளிநாட்டுப் பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட போது கண்டுகொள்ளாதவர்களும்தான் இன்று பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பேசுகின்றனர்.

இளைஞர் சமுதாயம் ராஜாக்களுக்கு அடிமைகளாக வேண்டிய தேவையில்லை. பெண்கள் மற்றும் இளைய சமுதாயம் தொடர்பில் இரண்டு பிரகனடங்களை கொண்டுவரவுள்ளோம். அவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நாட்டில் சட்டமாக்குவோம்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்துக்கு கொடுக்க வேண்டிய அனைத்து அதிகாரத்தையும் கொடுப்போம். குப்பை அகற்றுபவர்களாக அவர்களை பயன்படுத்த இடமளிக்க மாட்டோம்.

மத்திய மற்றும் சிறிய நடுத்தர மக்களை பாதுகாக்கும் நிலைபேண்தகு அபிவிருத்திக்கு முன்னுரிமையளிக்கப்படும். செல்வந்தர்கள் மாத்திரம் பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலனை அடையும் நிலையை மாற்றி நாட்டின் அனைவரும் பலனைப்பெறும் அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்துவோம்.

மத்திய கலாசார நிதியத்தில் நான் கொள்ளையடித்துள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். எனது கை மிகவும் சுத்தமானது. இரத்தக்கரை படியவில்லை. திருட்டுத்தனம் இல்லை. கொள்ளையடிக்கவில்லை. மனிதப் படுகொலையாளிகள் போதைப்பொருள் கடத்தல்காரரர்களை நான் பாதுகாக்கவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS