இலங்கை

“ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும் முடிவிலேயே ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றி தங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது விடயத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

“இன்று மக்கள் செல்வாக்குடன் காணப்படும் சஜித் பிரேமதாசவை களமிறக்கினால் மட்டுமே கூட்டணியால் வெற்றிபெற முடியும். பிரதமர் ஆரோக்கியமான முடிவை எடுப்பார் என நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் நாளை சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கூட்டணி அமைப்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவுள்ளனர். இச்சந்திப்பின் பின்னர் கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படலாமெனவும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் கலந்துரையாடப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இந்தச் சந்திப்புக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தவுள்ளார். இன்றைய சந்திப்பில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி முடிவெடுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.