இலங்கை
Typography

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்று முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். 

“குறிப்பாக சொல்லப் போனால் 134 அரசியல் கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர். ஒரு கைதியினைக் கூட ஜனாதிபதி விடுதலை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷ அரசினால் களத்தில் இருந்து நேரடியாக வந்த 12,000 போராளிகளை புனர்வாழ்வு அளித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கிரானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழர்களுக்கு எதுவிதமான நன்மையும் கிடைத்ததில்லை. இதில் ஒரு மாற்றத்தினை கொண்டுவரும் முகமாகவே மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

எமது வெற்றி என்பது நிச்சயம். இன்று ரணில் விக்ரமசிங்க பெரும் குழப்பத்தில் உள்ளார். தான் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது சஜித் போட்டியிடுவதா என்ற குழப்பத்தில் உள்ளார். சஜித் வந்து என்னத்தை செய்வார். அவரது தந்தை கடந்த காலத்தில் புரிந்த வன்முறைகளை தெரியுமா, இப்போதைய இளைஞர்களுக்கு எதுவும் புரியாது. சஜித் என்றவுடன் ஒரு மோகம். மட்டக்களப்பில் 500 வீடுகளைக் கூட கட்டிக் கொடுக்கவில்லை. எங்களது ஆட்சியில் 5000 வீடுகளை கட்டிக் கொடுத்தோம். அதில் பயனாளிகள் எதுவித பணமும் செலுத்த வேண்டியதில்லை. இவர் கொண்டு வந்த வீடு 2 இலட்சம் ரூபாய் மக்கள் செலுத்த வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS