இலங்கை

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தான் அதிகாரத்துக்கு வந்ததும் ஆறு மாத காலப்பகுதியில் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்குவேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்தப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்புத் தொடர்பில் புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வினவிய போது, “சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பு உத்தியோகப்பூர்வமற்றதாகவே இருந்தது. பல விடயங்கள் தொடர்பில் அவருடன் நாங்கள் கலந்துரையாடினோம். தேசியப் பிரச்சினை தொடர்பில் இன்னமும் அவர் முழுமையான அனுபவம் உடையவராக வரவில்லை. அத்துடன், அவர் இன்னமும் ஜனாதிபதி வேட்பாளராகவும் தெரிவுசெய்யப்படவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக அவர் தெரிவுசெய்யப்பட்டால் எமது கோரிக்கைகளுடன் அவரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

என்றாலும், தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் சில கருத்துகளை அவர் எம்மிடம் வெளியிட்டார். குறிப்பாக தாம் ஆட்சிக்கு வந்ததும் ஆறு மாத காலப்பகுதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்வேன் என்றார். அதேபோன்று காலம் சென்றால் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது கடினமாகும் என்றும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்குவேன் என்றும் சஜித் பிரேமதாச கூறியனார்.” என்றுள்ளார்.