இலங்கை

இலங்கையில் நடைபெறுவது போன்றே ஏனைய உலக நாடுகளிலும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களும் சட்டவிரோத வியாபாரிகளுமே சூழலை மாசடையச் செய்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

துல்ஹிரிய மார்ஸ் எதினா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பேண்தகு மானிட, சமூக மற்றும் சுற்றாடல் இருப்பினை உறுதி செய்வதற்கு மனிதனுக்கும் சுற்றாடலுக்கும் இடையிலான சமநிலையை பேண வேண்டியது மிக முக்கியமான தேவைப்பாடாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ செயற்பாட்டில் மிக முக்கிய பணி ஆசிய பசுபிக் வலயத்தின் அயன மண்டல நாடுகளில் வசிக்கும் அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, உயிர்ப்பல்வகைமையுடைய, தனித்துவமான, தேசத்திற்குரித்தான பெருமளவிலான தாவரங்களும் விலங்குகளும் இவ்வலயத்தில் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும் எனக் குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட வனாந்தரங்கள் ஒன்றிணையும் வகையில் வன வளர்ப்பில் ஈடுபடுவதனூடாக குறித்த வனாந்தரப் பகுதிகள் மீண்டும் இணைந்து அனைத்து உயிரினங்களினதும் எதிர்கால இருப்பு உறுதிசெய்யப்படும் என இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றாடல் ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பிரதேசங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாத்து தனித்துவமான அரிய வகை தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாத்தல் எதிர்காலத்திற்கான எமது இன்றைய கடமையாகும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ஏற்கனவே அயன மண்டல நாடுகளின் உயிர்ப்பல்வகைமை தொடர்பிலான கருத்தாய்வு தற்போது உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார். மேலும் ஆசிய பசுபிக் வலயத்தில் அயன மண்டல உயிர்ப்பல்வகைமையை பாதுகாப்பதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு விஞ்ஞானிகள் பங்குபற்றும் இம்மாநாடு இலங்கையில் இடம்பெறுவது எமது நாடு பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியாகும் எனவும் அது இலங்கை புத்திஜீவிகள் பெற்றுக்கொண்ட அரிய சந்தர்ப்பமாகும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் பெருமளவிலான உணவுப் பயிர்கள் வன விலங்குகளால் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்கான நிரந்த தீர்வு தொடர்பில் இம்மாநாட்டின் போது சகோதர உலக நாடுகளின் அனைத்து ஆய்வாளர்களும் கல்விமான்களும் முக்கிய கவனம் செலுத்துவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கம் 13வது முறையாக நடாத்தும் ஆசிய பசுபிக் சம்மேளனத்தின் ஒன்றுகூடல் இலங்கையில் முதன்முறையாக இன்று முதல் 13ஆம் திகதி வரை இடம்பெறுவதுடன், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.