இலங்கை

ஏகாதிபத்திய போக்கில் அல்லாமல், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்துக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்பேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கண்டி அஸ்கிரிய பீடத்தில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வைபவமொன்றில் பங்கேற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.தே.க. வேட்பாளர் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் காணப்பட்ட போது எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு நான் செவி சாய்ப்பேன். எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் எனக்கு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பிரதேச சபை தேர்தலை விட நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது பாரிய சவாலான விடயமாகும்.

இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் நாட்டை சௌபாக்கியத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வது எனது நோக்கம். கடந்தகால தலைவர்களையோ அரசுகளையோ விமர்சிக்க தயாராக இல்லை. ஏதோ ஒரு வகையில் அவர்களும் இந்த நாட்டுக்காக உழைத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.” என்றுள்ளார்.