இலங்கை
Typography

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி குறைத்து மதிப்பிடும் தரப்புக்களுக்கு பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டி ஏற்படும்.” என்று சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

கட்சிக்கும் கட்சி அங்கத்தவர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு சுதந்திரக் கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் அபேட்சகராக களமிறங்கியபோதும் வாக்கு பின்புலத்தை கருத்திற்கொள்ளும்போது அந்த எவருக்கும் சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது.

ஜனாதிபதி பதவியைப்போன்றே ஐந்து வருடங்களாக மக்கள் நலன்பேணலுக்காக மேற்கொண்ட தூய்மையான நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறுகளுடனேயே சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க உள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு இருதரப்புகளிலிருந்தும் அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்விதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுஜன பெரமுனவுடன் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருப்பது தாய் நாட்டையும் கட்சியின் தனித்துவத்தையும் முன்னிறுத்தியே ஆகும்.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பாதுகாக்கப்பட்டிருப்பது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சமர்ப்பித்துள்ள கடிதத்தின் காரணமாகவேயாகும். அது குறித்து அதன் உயர்மட்டத் தலைவர்களுக்கும் கீழ்மட்ட கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி உணர்வு இருந்தபோதும், இடைநிலையில் உள்ள சிலர் அதனை மறந்து இருப்பது குறித்து நான் கவலையடைகிறேன்.

தேர்தலுக்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போது தூதுவராலயங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன. சுதந்திரக் கட்சிக்கு அவ்விதமான எந்த நிபந்தனையும் கிடையாது. நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதிக்கும் ஊழல், மோசடியற்ற சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான ஒரு நாட்டுக்காக சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை வழங்கும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்