இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்படுவார் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.தே.க யாப்பில் அபேட்சகரை தெரிவு செய்யும் உரிமை செயற்குழுவுக்கே உள்ளது. ஐ.தே.கவில் அபேட்சகர்கள் அதிகமுள்ளனர். செயற்குழுவே அபேட்சகரைத் தெரிவு செய்யும். இதில் மூவின மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் பொறுமையாக இருக்கவும். பிரச்சினை தீர்ந்து விடும். சரியான நேரத்தில் கொண்டு வருவோம்.

எதிர்க்கட்சி வேட்பாளர் தொடர்பில் நாங்கள் அவசரப்படத் தேவையில்லை. முன்னரே தன்னை அடையாளப்படுத்தியவர்கள் செல்வதற்கு இடமில்லாமல் உள்ளனர். இவர்களை சுற்றி வந்தவர்கள் கடைசியில் வீட்டுக்கே போனார்கள். அபேட்சகரின் பெயர் குறிப்பிடப்பட்டதன் பின்னரே களம் சூடுபிடிக்கும். வெற்றி கொள்ளக் கூடிய ஒரு வரையே நாம் இறக்குவோம்.” என்றுள்ளார்.