இலங்கை
Typography

“எழுக தமிழ் போராட்டத்துக்கான பரப்புரையின்போது நாம் சந்தித்த மக்களும், பொது அமைப்புக்களும் முன்வைத்த கருத்துக்களை உள்வாங்குதோடு, தொடர்ந்தும் எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்து, அதற்கான காத்திரமான செயற்திட்டங்களை முன்வைத்து எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்.” என்று எழுக தமிழ் போராட்டத்தின் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து,
* சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து,
* தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்,
* வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடாத்து,
* வடக்கு – கிழக்கில் இராணுவ மயமாக்கலை உடனடியாக நிறுத்து,
* இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக் குடியமர்த்து ஆகிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை எழுக தமிழ்ப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் வாசிக்கப்பட்ட பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று நாம் முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் எமது தாயகம் தேர்தல் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளது. நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பாலைவனத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிவரும் தமிழ்த் தேசமானது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் சந்தித்த பொழுதும் தனது அடிப்படையான கூட்டுரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருந்து வருகின்றது.

இவ்வாறான ஓர் சூழலில் இன்றைய எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பொது மக்கள், அமைப்புக்கள், புலம் பெயர் சமூகம், நட்புறவு சக்திகள் மற்றும் அரசியற் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரதும் பங்குபற்றுதலுடன் தமிழ்த் தேசிய எழுச்சியாக எழுந்து நிற்கின்றது.

இப்பேரெழுச்சியானது நம்பிக்கையிழந்த எம்மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களின் ஒன்றுபட்ட எழுச்சியாகவும் பல்வேறு நாடுகளில் உலகத் தமிழர்கள் முன்னெடுக்கும் ஒருமைப்பாட்டு எழுச்சிகளின் திரட்சியாகவும் தென்னிலங்கைக்கும் இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் ஒரு வலுவான செய்தியை சொல்லி நிற்கின்றது.

இலங்கையில் தமிழினம் தற்போது மிக மோசமான ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுகின்றது.

இராணுவ நிலைகளை அதிகரித்தல் அதனைச் சுற்றி பௌத்த விகாரைகளையும், சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட எமது வழிபாட்டுத் தலங்கள், மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கடல் நீரியல் திணைக்களம், கனிமவியல் திணைக்களம், கமத்தொழில் திணைக்களம், உல்லாசப் பயணத் துறை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சர்வதேச சமூகம் வெளிப்பார்வையில் கண்டுகொள்ள முடியாத நுட்பமான வழிமுறைகளைக் கையாண்டு எமது வாழ்வியல், பொருளாதார, பண்பாட்டு அடையாளங்களை சிதைத்து வருவதுடன், தமிழ் மக்களின் வளங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை தமிழ் மக்களை திருப்திப்படுத்தாத தீர்மானங்களை தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் மத்தியிலும் முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகளாக நான்காண்டு கால அவகாசத்தை வழங்கியிருந்தும், அதனை கிஞ்சித்தும் மதிக்காத இலங்கை அரசு மாறாக சர்வதேச சமூகத்திற்கே சவால் விடும் வகையில் போர்க் குற்றவாளிகளையே மிக உயர் பதவிகளுக்கு நியமித்து வருகின்றது. இதன் உச்சமாக அண்மையில் நடந்த இராணுவத் தளபதியின் நியமனத்தைக் காணலாம்.

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு போராட்டம், கிழக்கிலும் வடக்கிலும் முன்னெடுக்கப்படும் காணமாலாக்கப்பட்டோருக்கான போராட்டம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டம், நீராவியடிப் பிள்ளையார் கோயில் போராட்டம், கன்னியா வெந்நீருற்றுப் போராட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்துவதற்கான போராட்டம் என தமது அன்றாடக் கோரிக்ககைகள் தொடக்கம் அரசியல் விடயங்களையும் முன்வைத்து போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு இன்று மக்கள் தலைமையேற்றிருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை மேலும் வலுவாக்கி, இருக்கக்கூடிய சர்வதேச நிலைமைகளையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி இலங்கை அரசின் அப்பட்டமான இனவழிப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பேசவும், அதனை எதிர்க்கவும், தடுக்கவும் போர்க்குற்றங்கள் மற்றும் தமிழ் இனவழிப்பு மீதான சர்வதேச விசாரணையை அழுத்தவுமாக நாம் மீண்டும் மீண்டும் தேசமாய் திரட்சி பெற வேண்டியுள்ளது.

எம்மக்கள் முன்னின்று நடத்தும் பேராட்டங்களின் கோரிக்கைகளும் தமிழ் மக்களது அரசியற் தீர்வு தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினது தீர்வுத் திட்ட யோசனைகளும் இந்த எழுக தமிழ் பேரெழுச்சியின் பிரகடனங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.

எமது மக்களின் தொடர் போராட்டங்களையும், எழுச்சிகளையும் நமது தேசத்தின் பலமாக மாற்றுவது தொடர்பாக நாம் காத்திரமான யோசனைகளை முன்வைத்துச் செயற்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் இந்த எழுக தமிழ் பரப்புரையின்போது நாம் சந்தித்த மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடனான உரையாடல்களின்போது அவர்கள் முன்வைத்த கருத்துக்களை உள்வாங்குதோடு, தொடர்ந்தும் எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தில் அதற்கான காத்திரமான செயற் திட்டங்களை முன்வைத்து எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம் என உறுதி பூணுவோமாக.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்