இலங்கை

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவா, சஜித் பிரேமதாசவா என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இரகசிய வாக்கெடுப்பை நடத்தி தீர்மானிக்க வேண்டும் என்று மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உருமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஜாதிக ஹெல உருமய ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “ஆளும் தரப்பிலுள்ள குழுக்கள் காரணமாக ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தாமதமாகி வருகிறது. ஜனாநாயக தரப்பு வெற்றிபெற்று நாட்டை முன்னேற்ற பரந்த கூட்டணி உருவாக்க வேண்டும். இதற்காக உகந்த திட்டமொன்று அவசியம்.

பரந்த கூட்டணி அமைக்க நாம் முயற்சி செய்தோம். இது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. ஜனநாயக கூட்டணியின் அங்கத்துவ கட்சிகள் தொடர்பில் உடன்பாட்டிற்கு வர முடிந்துள்ளது. சகலரது உடன்பாட்டுடனும் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
ஐ.தே.கவில் இருந்து இரு வேட்பாளர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் வேறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

106 ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 77 பேர் ஐ.தே.க. உறுப்பினர்களாகும். எனவே இவர்கள் கூடி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும். வேட்பாளரை தெரிவு செய்யும் உரிமை இவர்களுக்கே இருக்கிறது. இவர்களில் தெரிவு செய்யப்படாத மற்றைய நபர் அடுத்த குழுவுக்கு ஆதரவு வழங்காமல் காலங்கடத்தக் கூடாது. சகலரும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

பொதுஜன பெரமுன வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் ஜே.வி.பி வேட்பாளராக அனுர குமாரவின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எமது எதிர்கால நடவடிக்கை பின்னர் அறிவிக்கப்படும்.” என்றுள்ளார்.