இலங்கை

“தமிழ்த் தேசியம், சமஷ்டி பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்படுகின்ற சுயலாப பணப்பெட்டி அரசியலையோ அல்லது சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களால் முன்னெடுக்கப்படும் சவப்பெட்டி அரசியல்வாதிகளின் அரசியலையோ எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாக அவரது சிபாரிசில் வரவிருக்கின்ற வேட்பாளருக்கே நாங்கள் ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம். அதற்காக நாங்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆதரிக்கின்றோம். எமது மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அரசியல் உரிமைக்கான பிரச்சினையை முதலில் எடுத்துள்ளோம். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களில்தான் தங்கியிருக்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் இன்று மூன்று வகையான அரசியல் கருத்து உள்ளன. அதில் ஒன்று தமிழ் மக்களிடையே இன்று வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம், சமஷ்டி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பேசப்படும் சுயலாப தரகு பணப்பெட்டி அரசியல் செயற்பாடு. மற்றையது விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் போன்றோர்களினால் செயற்படுத்தும் சவப்பெட்டி அரசியல் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது. இரண்டு பேருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால் பிரச்சினைகளை தீராத பிரச்சினையாக வைத்திருப்பது அவர்களின் எண்ணமும் நோக்கமாகவும் உள்ளது.

எங்களுடைய எண்ணம் என்னவென்றால் நடைமுறையாக பிரச்சினைகளை அனுசரித்துக்கொண்டு உரியவர்களை அணுகி தீர்ப்பதுதான் எங்களின் எண்ணமும் நோக்கமும் ஆகும்.

கிழக்கு மாகாணத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மிகவும் அவசியமாகும்.நிலத்தையும்,தமிழ்மக்களின் நலன்களையும் பாதுகாப்பதோடு தமிழர்களின் இருப்பு பறிபோகாமல் பாதுகாப்பதுதான் கிழக்கு தமிழர்களின் எண்ணமும் திண்ணமும் ஆகும். விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மையுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பை தமிழ்மக்கள் கட்டிப்பாதுகாக்க வேண்டும்.” என்றுள்ளார்.