இலங்கை
Typography

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடுவதாக இருந்தால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே பிரதான நோக்கமாக இருக்கும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு மதத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தன்னிடம் கோரி வருவதாக குறிப்பிட்ட அவர், பலமானதும் பாதுகாப்பானதுமான நாட்டிற்கு அடித்தளம் இடுவதற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் இவ்வாறான அர்ப்பணிப்பொன்றை செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் விவாகாரம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கரு ஜயசூரிய, அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கடந்த சில வாரங்களாக மகாசங்கத்தினர் அடங்கலான மதத்தலைவர்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு துறைசார் புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள், இளைஞர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பல்வேறு வழிகளிலும் என்னைத் தொடர்பு கொண்டனர். ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுமாறு சிலர் தனிப்பட்ட ரீதியில் என்னை சந்தித்ததோடு சிலர் தொலைபேசியூடாகவும் ஊடக மாநாடுகள் வழியாகவும் என்னிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

ஜனநாயகத்தை பாதுகாத்து தற்போதைய அரசியல் நிலைமையை சீர்செய்து நாகரிகமான ஆட்சியொன்றை ஏற்படுத்த நம்பகரமான தலைமையொன்று நாட்டுக்கு அவசியம் என்பதே சகலரதும் பொதுவான கோரிக்கையாகும்.

என்மீது இவ்வாறான நம்பிக்கை வைத்தமை குறித்து மதத்தலைவர்கள் அடங்கலான சகல தரப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு எத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும். 1995ஆம் ஆண்டு முதல் நாம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்வதை பிரதான நோக்கமாக கொண்டு மாத்திரமே இந்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.

17வது திருத்தத்தினூடாக முன்வைக்கப்பட்டு 19வது திருத்தத்தினூடாக உறுதிப்படுத்தப்பட்ட முக்கிய ஜனநாயக மறுசீரமைப்பை ஆதரிக்கும் தரப்பினருடன் மாத்திரமே பயணிக்க முடியும்.

முன்னேற்றகரமான ஜனநாயகத்துடன் கூடிய பொருளாதார, ஒழுக்கவிழுமிய அடிப்படையில் பலமானதும் பாதுகாப்பானதுமான நாட்டிற்கு அடித்தளம் இடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் செய்யும் அர்ப்பணிப்பாகவே இது இருக்கும். ஜனாதிபதி பதவியை எதிர்பார்த்து மேற்கொள்ளும் தலையீடாக இதனை கருதக் கூடாது.

ஜக்கிய தேசிய முன்னணி அடங்கலான பிரதான தரப்பினரை உள்ளடக்கி வேட்பாளராக போட்டியிடுவதானால் கட்சி அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவும் சகல தரப்பினரதும் ஆசிர்வாத்துடனும் இது அமைய வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS