இலங்கை

வரும் நவம்பம் மாதம் 16ஆம் திகதி கிடைக்கும் மக்கள் ஆணையுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரை அதிகாரத்தில் இருந்து அகற்றுவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கூட்டுறவு துறையின் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள தேசிய கண்காட்சி காட்சிப்படுத்தல் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அங்கு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வீதிக்கு இறங்கி உரிமைகளுக்காக போராடுகின்றார்கள். தொடர் போராட்டங்கள் நாட்டில் எங்காவது ஒரு இடத்தில் இடம் பெற்றுக் கொண்டே உள்ளது. நாட்டில் அரசாங்கம் ஒன்று செயற்படுகின்றதா என்ற நிலைமை தற்போது காணப்படுகின்றது. காலநிலைமையினை கூட பொருட்படுத்தாமல் மக்கள் போராடும் அளவிற்கு பல நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள்.

என்னையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் பழிவாங்கும் நோக்கிலே அரசியலமைப்பின் 19வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஒரு நாட்டின் அரசியலமைப்பே மேன்மை பொருந்தியதாக காணப்படும். அந்த யாப்பில் மக்களுக்கும், நாட்டின் சுயாதீன தன்மைக்கும் தேவையான ஏற்பாடுகளே உள்ளடக்கப்படும். ஆனால் 19வது திருத்தம் அதிகார போட்டி, அரசியல் பழிவாங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அலரிமாளிகையின் அரசியல் சூழ்ச்சிக்கு அமைய உருவாக்கப்பட்டது. என்மை வீழ்த்த கொண்டு வந்த இத்திருத்தம் இன்று முழு நாட்டுக்கும் சாபக்கேடாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.” என்றுள்ளார்.