இலங்கை
Typography

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இழுபறி நிலையில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெறினும், நாளை வியாழக்கிழமை இடம்பெறும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 2024ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவே தொடர்வார் என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS