இலங்கை

தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைகளுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் தலையிட வேண்டிய காலம் வந்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த தேரரின் சடலத்தை நீராவியடி இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் குறித்த பௌத்த பிக்குவின் சடலம் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்து அருகில் உள்ள கேணிக்கரையருகில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தில் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசும் போது, “நிலைமையின் பாரதூரத்தை ஐ.நா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே நடைபெற்ற சம்பவங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.” என்றுள்ளார்.