இலங்கை
Typography

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக இருந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மாத்திரம்தான் நிறுத்துவோம். குமார வெல்கமவை நிறுத்த எந்தத் திட்டமும் கிடையாது.” என்று சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமன்றி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட பல மாற்று சக்திகள் உள்ளதாகக் கூறிய தயாசிறி ஜயசேகர, பொதுஜன பெரமுனவினர் தம்மைப் பற்றி அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடத் தயார் எனக் குமார வெல்கம கூறியிருப்பது தொடர்பில் இங்கு வினாவப்பட்டது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தயாசிறி ஜயசேகர மேலும் கூறியதாவது,

“குமார வெல்கம சுதந்திரக் கட்சியில் இருந்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷவின் காலில் விழுந்திருந்தார். அந்த நிலையிலே அவர் கோட்டாபயவையும் விமர்சித்து வந்தார். தற்பொழுது சுதந்திரக் கட்சியிடம் அவர் சேர்ந்துள்ளார். அவரை வேட்பாளராக நிறுத்த எந்த திட்டமும் கிடையாது. மத்திய குழுவும் செயற்குழுவுமே இது தொடர்பில் முடிவு செய்யும். சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதாக இருந்தால் ஜனாதிபதியே போட்டியிடுவார்.

பொதுஜன பெரமுனவுடன் பேசி வருகிறோம். அவர்கள் தம்மை பற்றி அதீத நம்பிக்கையில் உள்ளனர். எமக்கு எந்த நிபந்தனையும் இன்றி அவர்களுடன் இணைய முடியாது. சின்னம் தொடர்பில்தான் நிபந்தனை விதித்துள்ளோம்.

வேறு பதவிகள் எதுவும் கோரவில்லை. எவ்வித நிபந்தனையும் இன்றி அவர்களுடன் இணைந்தால் கட்சி கரைந்துவிடும். அமைச்சுப் பதவிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மீண்டும் தெரிவாவதற்கும் மாத்திரம் அவர்களுடன் இணைய முடியாது. கட்சியை பாதுகாத்து, கட்சியின் தனித்துவத்தை பேணியே முடிவு எடுக்க வேண்டும்.

நாம் ஜே.வி.பியுடனும் பேசத் தயாராக இருக்கிறோம். அவர்கள் கூட்டணியாக போட்டியிடுகின்றனர். முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் சகல கூட்டணிகளும் எமக்கு முக்கியமாகும். பொது ஜன பெரமுன மட்டுமன்றி எமக்கு பல மாற்று வழிகள் இருக்கின்றன.” என்றுள்ளார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS