இலங்கை

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையம், யாழ் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

குறித்த பெயர் மாற்றம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விமான நிலையமாக இருந்து வந்த பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி கடந்த ஜுலை மாதம் 05ஆம் திகதி ஆரம்பமானது. இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10ஆம் திகதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாசியுடன் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ் சர்வதேச விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் (ICAO CODE) என்பது VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் (IATA) என்பது JAF ஆகும். இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் BTC என்பதாகும்.

கொழும்பு - இரத்மலான சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீட்டு இலக்கம் RML ஆகும். இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இவை கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே இவையாகும்.