இலங்கை

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னெடுப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் ஏற்றுக்கொள்வதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு தேர்தல் செயலக வளாக பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் அனுமதி பெற்ற இருவருமாக மூவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்களென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதனால் இம்முறை தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் வழமைக்கும் மாறான வேலைப்பளுவுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று மாலைவரை ஒரு பெண், இரண்டு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கட்டுப்பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு சுமார் 05ஆயிரம் மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கலாமென்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.