இலங்கை

சிறுபான்மை- பெரும்பான்மை என்ற பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே கண் கொண்டு பார்க்கப்போவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் புத்திஜீவிகள், உலமாக்கள், தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சஜித் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் கொழும்பில் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் புதுக்கடையில் பிறந்து வளர்ந்தவன், அந்த மக்களுடன் ஒன்றாக வாழ்ந்தவன். தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் நெருக்கமாக வாழ்ந்த பகுதியில் வளர்ந்ததால் அவர்களோடு இணக்கமாக செயற்பட முடிந்தது.

இன, மத, மொழி பேதம் என்னிடம் கிடையாது. எல்லோரையும் சமமாகவே பார்க்கின்றேன். இனம், மதம் எம்மை ஒன்றுபடுத்த பயன்பட வேண்டுமெயொழிய பிளவுபடுவதற்குரியதல்ல. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய வழி வகைகள் காணப்படும். எந்தவொரு சமூகத்துக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது. தீவிரவாதம், வன்முறைகளுக்கு இடமளிக்க போவதில்லை. மதவழிபாடுகளுக்கு உத்தரவாதமளிக்கப்படும். புதிய பொருளாதாரக் கொள்கையொன்று அமுல்படுத்தப்படும். அதனை எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புகுத்தப்படும்.

எந்த ஒரு சமூகமும் பாதிக்கப்படும் வகையில் செயற்பட மாட்டேன். நான் உண்மையான பௌத்தன் அதன்படி என்னிடம் இனவாதமோ மதவாதமோ கிடையாது. எல்லாச் சமூகங்களையும் எனது நாட்டு மக்களாகவே நேசிப்பேன்.” என்றுள்ளார்.