இலங்கை

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தை மாற்றுவதற்கு சட்ட ரீதியான தடைகள் உள்ளது. அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இதற்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குமென தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மொட்டு சின்னத்தை விடுத்து பொது சின்னமொன்றில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு முன்வருவாரானால் அக்கட்சியுடன் இணைந்து செயற்பட முடியுமென தெரிவித்துள்ள நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது கோட்டாபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனை மாற்ற முயற்சித்தால் மீண்டும் நீதிமன்றம் செல்ல நேரிடும்.” என்றுள்ளார்.