இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. 

சுதந்திரக் கட்சியின் முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 05ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதன் பிரகாரமே இன்றையதினம் கட்சியின் இறுதி நிலைப்பாடு வெளியாகுமெனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி வெளிப்படையாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

இருதரப்புக்கும் இடையில் கூட்டணியை அமைப்பது தொடர்பில் இதுவரை எட்டு சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலும் பலமுறை இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.