இலங்கை
Typography

“காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ நகைச்சுவையுடன் கூறிய பதில் எங்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தில் இராணுவத்தினர் காணாமல் போவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தது கோட்டாபய ராஜபக்ஷவே.” என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

வாழைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் தான் யுத்தத்தினை நடாத்தினேன் என்று கூறிய கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நான் செய்யவில்லை என்றார். நான் அதிகாரி யுத்தத்தினை செய்தவர் சரத் பொன்சேகா என்று கூறுகின்றார். நாங்கள் இறுதி போரின் பின்னர் நிராயுதபாணியாக எங்களது உறவுகளை ஒப்படைத்தோம். இதில் அரசாங்கம் மட்டுமல்ல சில நாடுகளும் தொடர்பில் உள்ளது.

ஒரு பத்திரிகை வாசிப்பவராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்திருந்தால் பத்திரிகையாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்கி இருப்பார். காணாமல் போனோர் தொடர்பில் கோத்தபாய நகைச்சுவையுடன் கூறிய பதில் எங்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாபய நினைக்க கூடாது ஒன்று இரண்டு பேரை ஏமாற்றி விடலாம் என்று. கொலை செய்யப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்று சொல்வது அவருக்கு பொருத்தமாக இருக்கலாம். இராணுவம் காணாமல் போனதாக கூறினார். இராணுவம் காணாமல் போவதற்கு காரியகர்த்தாவாக இருந்தது கோட்டாபய ராஜபக்ஷவேதான்.

போரில் இறந்தவர்களின் உடலை பொறுப்பெடுக்காத இராணுவ தளபதிகள் நல்ல நிலையில் இருந்த உடல்களை மாத்திரம் பெற்று சிங்கள மக்களை ஏமாற்றினார்கள். சிதைவடைந்த உடல்கள் சந்திரன் பூங்கா என்று பேசப்படுகின்ற கிளிநொச்சியில் வெற்றி சின்னம் என்று பேசப்படுகின்ற இடத்தில் அனைத்து உடலங்களும் எரிக்கப்பட்டது. ஒரு நல்ல பொறுப்புள்ள அதிகாரியாக இருந்திருந்தால் உடல்களை எரிக்காமல் சிங்கள மக்களை ஏமாற்றாமல் அவர்களிடம் வழங்கி இருக்கலாம்.

நல்லாட்சி அரசாங்கத்திலும் கட்டமிட்ட இன அழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தது. தமிழர்கள் பேரம் பேசும் சக்தியை இழந்தர்களாக நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்து இந்த ஆட்சியை கொண்டு வந்திருந்தும் இன்றுவரை சாதாரண நடைமுறை பிரச்சனைகள் கூட தீர்க்கப்படவில்லை.

காணாமல் போனோர் பிரச்சனை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, நில ஆக்கிரமிப்பு இவ்வாறான பல அன்றாடப் பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையில், இனப்பிரச்சனைக்கான தீர்வும் எட்டப்படவில்லை. அரசினை குறை சொல்வதை விட இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னிப்பினைந்த நெருக்கமான உறவை அரசுடன் கொண்டிருக்கின்றார்கள்.

சர்வதேச சக்திகள் எங்களை திரும்பி பார்க்க வைக்க கூடிய வகையிலான ஒரு பேரம் பேசலை கொண்டு வருவதற்காக இம்முறை பொது வேட்பாளரை களமிறக்கியுள்ளோம். ஏட்டிக்கு போட்டியாக யார் இனவாதத்தினை பேசுகின்றார்களோ அவருக்கான வாக்கு வங்கியை சேகரிப்பதற்கான திட்டம் தான் தெற்கில் இருக்கின்ற பேரினவாத பிரதான வேட்பாளரின் நிலையாக உள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்