இலங்கை
Typography

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காக எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கவும் பின் நிற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும், அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அதனையடுத்து பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையையும் ராஜபக்ஷ குடும்பத்தினர் உரிமையாக்கிக்கொள்ளலாம் என்ற சந்தேகமுள்ளது. இந்தநிலையில் கட்சியைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதற்காக ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை இணைத்துக்கொண்டு மாபெரும் கூட்டமொன்றை நடத்தப்போவதாக தெரிவித்த குமார வெல்கம, அக்கூட்டத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குமார வெல்கம மேலும் தெரிவிக்கையில், “எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தது ஒவ்வொருவரும் தத்தமது விருப்பப்படி அதனை செயற்படுத்துவதற்கல்ல. ஒவ்வொருவருக்கும் தேவையான நன்மைகளையும் பயன்களையும் பெற்றுக்கொள்ள முயல்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கட்சியைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளதால் கட்சி முழுமையாக சீரழியும். இத்தகைய முடிவை எடுத்தவர்கள் சுதந்திரக் கட்சியை தொடர்ச்சியாக அங்கம்வகித்தவர்களல்ல. கட்சியிலிருந்து வேறு கட்சிகளுக்கு தாவிச்சென்று மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டவர்களே. அத்தகையோருக்கு கட்சி தொடர்பில் எதுவித அக்கறையும் கிடையாது. கட்சி எக்கேடுகெட்டுப்போனாலும் அது தொடர்பில் அவர்களுக்கு அக்கறை கிடையாது.

சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை கட்சியை நேசிப்பவர்கள் இப்போதும் கட்சியுடனேயேயுள்ளனர். சிலரே பொதுஜன பெரமுனவுடன் சென்றுள்ளனர். அவர்கள் கட்சியைப்பற்றியோ நாட்டைப் பற்றியோ அக்கறையில்லாதவர்கள். அத்தகையோருக்கு வேறு வேறு நாடுகள் உள்ளன. எனினும் இந்த நாட்டின் அப்பாவி மக்களுக்கு வேறு நாடு கிடையாது. அதேபோன்றுதான் உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கும் செல்வதற்கு வேறு இடம் கிடையாது. நான் நேர்மையானவன். மிக நேர்மையாக சிந்திப்பவன். கட்சியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அனைவரும் மீள வந்து இணைவர்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS