இலங்கை

“நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட பொறுப்பற்றதன்மையே புலனாய்வுத்துறை வீழ்ச்சியடையக் காரணமாகும். இதுவே, இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரசாரம் மேலெழுவதற்கும், உயிர்த்த ஞாயிற்றுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கும் காரணமாகும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். இச் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

குறித்த விசாரணை ஆணைக்குழுவின் செயற்பணிகள் மற்றும் ஒழுங்கமைப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெளிவுபடுத்திய அதன் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜானக்க டி சில்வா, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இதன் போது, தாக்குதல் ஒன்று நடாத்தப்படுமென முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என்றும் இதனை மறைப்பதற்காக சில அதிகாரிகள் பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கையில், “தாக்குதலுக்கான காரணத்தை சரியாக இணங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அபிலாஷையும் இதுவேயாகும்.

நான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியபோது தேசிய பாதுகாப்பு சபை தினமும் ஒன்று கூடியது. புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடினேன்.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் தகவல்கள் கிடைத்த மறுகணமே தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்து அடிப்படைவாத கருத்துக்களை பிரசாரம் செய்த 160 விரிவுரையாளர்கள் இவ்வாறே நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளது.

தாக்குதல் தொடர்பான சகல தகவல்களையும் கண்டறிவதுடன், இத்தகைய தாக்குதல்கள் மீண்டுமொருமுறை இடம்பெறாதிருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

அத்தோடு பாதுகாப்பு பொறிமுறை வீழ்ச்சியடைவதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். இதற்காக ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.