இலங்கை
Typography

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்யும் அதிகாரம் கட்சியின் பாராளுமன்றக் குழுவுக்கு இல்லை. 2024 வரை ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பதவியில் தொடர்வதை எவராலும் தடுக்க முடியாது.” என்று முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

“தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க சுயவிருப்பில் விலகினாலும் கட்சியின் செயற்குழுவே தலைவரைத் தீர்மானிக்கும். ஒருவரது பெயர் பிரேரிக்கப்பட்டு விஷேட மாநாட்டில் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே கட்சிசியின் தலைவர் தெரிவாவார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டிலே வஜிர அபேவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எவரும் கட்சி யாப்பையோ, ஒழுக்க விதிகளையோ மீறிச் செயற்பட இடமளிக்க முடியாது. 70 வருடங்களுக்கு மேலாக ஜனநாயக ரீதியில் தலைநிமிர்ந்து நிற்கும் கட்சிக்குள் சிக்கலை ஏற்படுத்த சிலர் முனைகின்றனர். இவ்விடயத்தில் அவர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.

தனிப்பட்ட குரோதமுள்ளோரே தற்போதைய கட்சித் தலைமையை விமர்சிக்கின்றனர். சுதந்திரக் கட்சித் தலைவராக இருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா காலமான பின்னரே, சிறிமாவோ பண்டாரநாயக்கா கட்சித் தலைமையை பொறுப்பேற்றார். அவருக்குப் பின்னர் சந்திரிகா தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். கட்சியை பாதுகாத்து மீட்டெடுக்க ரணில் விக்ரமசிங்க பல தியாகங்களைச் செய்தவர். இதை எவரும் மறந்துவிட முடியாது. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றபோதும் ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டது. கட்சிக்குள்ளிருந்த சிலரது தவறான நடவடிக்கைகளாலே, ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.

பொதுத் தேர்தலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்கொள்வதே கட்சியில் பெரும்பான்மையினரின் விருப்பமாகும். தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை. திறமையானவர்களையும், மூத்த அரசியல்வாதிகள், துடிப்புமிக்க இளைஞர்களையும் களமிறக்கி, தேர்தலில் வெற்றிபெறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்