இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

‘கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று கோருவதால், அந்தத் தலைமைத்துவத்தை எனக்கு தரவேண்டும் என்று யாரும் கருத வேண்டியதில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையொன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அதிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இனப் பிரச்சினைக்கான பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களுக்கு வரவிருக்கும் கெடுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர மறுப்பதாகவும், கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை மக்கள் பிரச்சினைகளை மறந்தது போல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கஞ்சிப் பானைக்கு காலப்போக்கில் விற்று விடுவார்கள் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.

சேர்.பொன்னம்பலம் இராமநாதன் தொடக்கம் இன்றுவரையான சகல தமிழர் தலைவர்களும் சட்டத்தரணிகளாகவே இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆகவே அவர்கள் மக்களை ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் கொண்டு வருவார்கள் என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று உருமாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் தமிழ் தலைமைகள் செயற்படுவது வேதனைக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை தம் கைகளுள் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ் தலைமைகளின் பலவீனத்தை புரிந்துக் கொண்டு மத்திய அரசாங்கம் அவர்களை தம்வசப்படுத்தி வருவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.