இலங்கை

கொரோனா நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த் தொற்று பரவலுடன் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மிகவும் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்ததனை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். ´இதன்போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. சிறந்த திட்டத்துடன் அவை ஒவ்வொன்றாக வெற்றிகொள்ளப்பட்டது. தனிமைப்படுத்தல் முகாம் குறித்து அன்று எந்தவொரு நாட்டிலும் கேள்விப்படவில்லை. அதனை நாமே அறிமுகப்படுத்தினோம். இன்று பெரும்பாலானவர்கள் அதனை மறந்து விட்டனர்´ என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமின் கொரோனா நோய்த் தொற்றுடைய சிலர் கண்டறியப்பட்டதுடன் உருவாகியுள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை, இராணுவம், புலனாய்வுதுறை மற்றும் பொலிஸாரின் பங்களிப்பை பெற்று ஜனவரி 26ஆம் திகதி கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது. சீனாவின் வூகான் மாநிலத்தில் அநாதரவாக இருந்த மாணவர்களை விடுவித்தது முதல் அனைத்து நாடுகளை பார்க்கிலும் கடந்து, ஒரு அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

அரசாங்கம் தலைமை வழங்கி தீர்மானங்களை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்து துறைகளினதும் பங்களிப்புகளை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய பண்புகள் சவாலை வெற்றிகொள்வதற்கு அடிப்படையாக அமைந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். 74 நாடுகளிலிருந்து 16,279 பேரை தாய் நாட்டுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 70 தனிமைப்படுத்தல் நிலையங்களை பராமரித்து மேற்கொண்ட பணிகளையும் ஜனாதிபதி நினைவுப்படுத்தினார்.

´தனிமைப்படுத்தல் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடுகின்றபோது பிரதேசவாசிகளின் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தருவோரை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும்போது அவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. எதிர்காலத்திலும் எத்தகைய தடைகள் வந்தாலும் சவால்களை வெற்றிகொண்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனை அண்டிய நான்கு கொத்தனிகள் வரையான விரிந்த சுற்றுப்பகுதி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உருவாகியுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருப்பதைப் போன்று எதிர்காலத்திலும் உருவாகும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

PCR பரிசோதனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்தில் நோய்த் தொற்று பரவுவதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தார். நோய்த் தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்ட இராஜாங்கனை உள்ளிட்ட ஏனைய இடங்களில் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, நோய்த் தொற்று பற்றிய புதிய தகவல்களையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

கொரோனா நோய்த் தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையுடன் இணைந்ததாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இரவு, பகல் பாராது தொடர்ச்சியாக பங்களிப்புகளை வழங்கிவரும் அனைவரையும் தான் பெரிதும் மதிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கொவிட் செயலணியின் உறுப்பினர்களும் விசேட வைத்திய நிபுணர்களும் இக்கலந்துடையாடலில் பங்குபற்றினர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.