இலங்கை

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ள வெற்றி தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாபெரும் வெற்றி நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று நான் சொல்ல வேண்டும். கொவிட் - 19 தொற்று நோயால் உலகம் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தோம்.

இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்தனர்.

நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஜனநாயக முறையில் ஜனநாயகத்திற்காக பணியாற்ற மக்கள் முன்வந்திருப்பது ஒரு நாடாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயமாகும்.

மேலும், இதுபோன்ற ஒரு ஜனநாயக தீர்மானத்தை மேற்கொண்டு அதை ஒரு தொற்றுநோய் சூழ்நிலையில் செயல்படுத்த முன்வந்த ஒரு சில நாடுகள் மட்டுமே உலகில் உள்ளன.

அத்தகைய முடிவை எடுத்த நாடு இலங்கை. தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வந்த அனைத்து மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக உலக சுகாதார பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றி இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம், சுகாதார சேவை, பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு முடியுமானதாயிற்று.

சவால்களின் மூலம் தான் உண்மையான வெற்றி பிறக்கிறது. போரை வெல்வது, கொவிட் -19 தொற்றுநோயை வென்றது மற்றும் இது போன்ற மிக வெற்றிகரமான தேர்தலை நடத்துவது நம் நாட்டின் பலத்தையும் மக்களின் பலத்தையும் உலகுக்குக் காண்பிக்கும்.

இந்த தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும். இந்த தேர்தலின் வெற்றி, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை இந்நாட்டில் செயற்படுத்துவதற்கு முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்கிறது.

இந்த வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும், தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், அனைத்து அரச அதிகாரிகள், அனைத்து ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல்களை வெற்றிகரமாக மற்றும் அமைதியாக நடத்துவதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.” என்றுள்ளார்.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.