இலங்கை

“உத்தேச 20வது திருத்தச் சட்டத்தினூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. அத்தோடு, 13வது திருத்தத்தை சரியாக கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பமாகும்.” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கடற்றொழில் அமைச்சில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனேடியத் தூதுவர் டேவிட் மைக்கினனுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தை குறைப்பதற்கு கனாடாவின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாகவும் அமைச்சர் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவையென்ற அடிப்படையில் வீசப்படுகின்றன. ஆனால், கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த இழப்பு வீதம் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. இந்நிலையிலேயே கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனேடிய உயர் ஸ்தானிகர், அது தொடர்பாக சாதகமாக பரசீலிப்பதாக தெரிவித்ததுடன் இலங்கையின் சமுத்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து கனேடிய கடல்சார் கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளினால் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கனேடிய உயர்ஸ்தானிருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கமைய அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கமைய அரசியலமைப்பில் இத் திருத்தச் சட்டம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது முழுநாட்டு மக்களினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நவராத்திரி விழாவை கொண்டாடுவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமையையும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.