இலங்கை

தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ந்தும் ஒன்றித்துப் பயணிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்காக ஐவர் கொண்ட குழுவொன்றை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் கூடி கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இன்று மீண்டும் கூடி ஆராய்ந்தோம். இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஸ்தாபன ரீதியாக செயற்பட வேண்டும் என கலந்துகொண்ட அனைத்து பிரதிநிதிகளும் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

அதற்காக நாம் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அமைப்பு ரீதியாக எவ்வாறு நாம் செயற்பட வேண்டும். எவ்வாறு நாம் ஸ்தாபன ரீதியாக அமைய வேண்டும் என அந்தக் குழு ஆராயவுள்ளது. அவர்கள் எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.

அதன்பின்னர், நாம் அந்த அறிக்கை தொடர்பாக ஆராயவுள்ளோம். மேலும், இன்றைய கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

எனினும், நாம் தமிழ் தேசியப் பரப்பில் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றாக இயங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசவுள்ளோம்.

தமிழர்கள் எதிர்நோக்குகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழ் தேசியப் பரப்பில் இயங்குகின்ற நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து பயணிப்பது என தீர்மானித்துள்ளோம். குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக எந்தவொரு பிரச்சினைகள் எழுந்தாலும் அனைத்து கட்சிகளும் உடனடியாக ஒன்றுகூடி தீர்மானங்களை எடுத்து ஓரணியில் பயணிப்பது என தீர்மானித்துள்ளோம்.

20ஆம் திருத்தம் தற்போது பேசுபொருளாக உள்ளது. அந்த இருபதாவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, பாராளுமன்றத்தில் அந்தந்தக் கட்சிகளின் பாராளுமன்றக் குழு ஒன்றுகூடி அதனை எதிர்ப்பார்கள் என நான் நம்புகின்றேன்.” என்றுள்ளார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.