வடக்கு –கிழக்கில் நாளை திங்கட்கிழமை பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளும், அமைப்புக்களும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, இடித்தழிக்கப்பட்டது. அதனைக் கண்டித்தே, கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தைத் தெளிவூட்டும் ஊடக சந்திப்பில் ஏழு கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் இணைந்து குறித்த அழைப்பினை விடுத்தன.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைக் சுட்டணி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சிகக் கழகம் சார்பில் அனந்தி சசிதரன் மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் ஊடக சந்திப்பின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளனர்.
அதற்கு அமைவாக வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் வர்த்தக செயற்பாடுகளை நிறுத்தியும், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை பகிஷ்கரித்தும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.