யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விவகாரத்தில் இந்தியா தலையிட்டதாக இந்தியாவின் ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நடவடிக்கை குறித்து இந்தியாவிலிருந்து கிடைத்த செய்தியே அதிகாரிகள் அழிக்கப்பட்ட நினைவுத்தூபியை மீண்டும் உருவாக்க தீர்மானித்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது.
நினைவுத்தூபி இரவில் அழிக்கப்பட்ட செய்தி கிடைத்த மறுநாள் இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் புதுடில்லியின் தலையீடுகள் குறித்த முணுமுணுப்புகளிற்கு மத்தியில் இந்த சந்திப்பு குறித்த விபரங்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.
இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார், அவர்கள் யாழ்பல்கலைகழக நினைவுத்தூபி விவகாரம் குறித்து ஆராய்ந்தனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஊடக செயலாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பினர், புலனாய்வு தரப்பினர், கல்வியமைச்சு உட்பட அனைவரினதும் உத்தரவு காரணமாகவே தனது நினைவுத்தூபி இடிப்பு குறித்த உத்தரவு வெளியானது என முன்னர் தெரிவித்திருந்த யாழ். பல்கலைகழக துணைவேந்தர் பின்னர் அதிகாரிகள் பதற்றத்தை தணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் எனவும் தெரிவித்தார். தமிழ்நாடு கொந்தளிக்கின்றது என அவர் தெரிவித்தார்.
புதிதாக உருவாக்கப்படும் நினைவுத்தூபி யுத்தத்திற்கு பதில் சமாதானத்தையே கொண்டாடும் என தெரிவித்துள்ள துணைவேந்தர், நினைவுத்தூபியை கட்டியெழுப்புவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை உருவாக்கியுள்ளோம் எனவும தெரிவித்துள்ளார்.