அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஏற்கனவே, இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு உறுதியளித்திருந்தார்.” என்றுள்ளார்.