“பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைக்கவில்லை, என்றால் ஜனநாயக வழிகளில் போராட நாம் தயாராகவே இருக்கிறோம்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கிடைத்துள்ள சிறைத் தண்டனையை அடுத்து, அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தற்போது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், அவரது பாராளுமன்ற உறுப்புரிமை 6 மாதங்களுக்கு இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. நாம் இதுதொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளோம்.
அதாவது அரசமைப்பின் 66, 89, 91, 105 ஆவது அரசமைப்புக்கு இணங்க, அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், அதற்கெதிராக அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராட நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றுள்ளார்.