“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறந்த நட்புறவு காணப்படுகின்றது. பொருளாதாரம், கலாசார ரீதியாக எமக்கு மிகவும் நெருக்கமான நாடு இந்தியா. அப்படியான நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எம்மை கைவிடாது.” என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜீ.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கிழக்கு முனைய விவகாரம் இதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுடன், மேற்கு முனையம் குறித்து நாம் இந்தியாவுடன் கலந்துரையாடி வருகின்றோம். எனவே, மனித உரிமைகள் பேரவை அமர்வில், எமது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில், இந்தியா செயற்படாதென நம்பிக்கை வெளியிட்டார்.
இதுவரையிலும் நாம், முன்னெடுத்த செயற்பாடுகள், எங்களுடைய நிலைப்பாடு தொடர்பில், மனித உரிமைகள் பேரவைக்குத் தெட்டத்தெளிவாக முன்வைப்போம். எதிர்கால செயற்பாடுகளையும் எமது அரசியலமைப்புக்கு கீழ் தான் முன்வைப்போம் என்பதையும் அறிவிப்போமெனத் தெரிவித்த அவர், மனித உரிமைகள் பேரவையானது, தனது விடயதானத்துக்குள் மாத்திரம் செயற்பட வேண்டும். நாடொன்றின் உள்ளக விடயங்களில் தலையிட சட்டரீதியாகவோ ஒழுக்க ரீதியாவோ செயற்படுவதற்கு அந்தப் பேரவைக்கு எவ்வித உரிமையும் இல்லை.
நாட்டொன்றை இலக்கு வைத்துக் கொண்டுவரப்படும் யோசனையை, நாம் முழுமையாக எதிர்ப்போம். அவ்வாறான யோசனை, இலங்கைக்கு எதிராக இன்று கொண்டு வரப்படுகின்றதெனில், இன்னொரு நாட்டுக்கு எதிராக, நாளை கொண்டுவரப்படலாம். எனவே, சகல நாடுகள் தொடர்பிலும் ஒரே கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.
பேரவையில் முன்னெடுக்கப்படும் விடயங்கள், நாட்டுக்கு நன்மை பயப்பதாய் அமையவேண்டும். வெளிநாடுகளில் செயற்படும், புலம்பெயர்ந்தவர்களின் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே, இவ்வாறான யோசனைகள் எமது நாட்டுக்கு எதிராகக் கொண்டுவரப்படுவதை நாம் நிராகரிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை, நோக்கங்களுக்குச் சிறிதளவும் பொருந்தாத விடயங்கள் என்பதைச் சுட்டிக்காட்டியே, எமது நிலைப்பாடை அங்கு முன்வைத்துள்ளோம்.” என்றுள்ளார்.