இலங்கை
Typography

இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக திருத்தங்களை செய்வதற்கான பரிந்துரைகளை முன் வைக்க அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

ஐரோப்பிய ஓன்றியத்திடம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெறுவதை நோக்கமாக கொண்டே இந்த மாற்றத்தை கொண்டு வர அரசாங்கம் முனைவதாக ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் சம்மாந்துறையில் ஹிஜ்ரா சந்தியில் ஒன்று கூடிய முஸ்லிம்கள் இந்த திருத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக கண்டனங்களை வெளிப்படுத்தும் கோஷங்களை எழுப்பினர்.

முஸ்லிம் தனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தங்கள் உரிமையில் கை வைக்கும் செயல் என சுட்டிக் காட்டும் வகையிலான வாசக அட்டைகளையும் அவர்கள் ஏந்தியவாறு அங்கு காணப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராகவும் கண்டனங்களை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தேவை என்றால் அதற்கு ஒரு வருட கால அவகாசம் தேவை. அதனை முஸ்லிம் தலைவர்களும் இஸ்லாமிய அறிஞர்களும் கூடி ஆராய்ந்து குர் - ஆன் அடிப்படையில் திருத்தங்களை முன் வைப்பார்கள் என ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத் கூறுகின்றது .

(BBC)

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்