இலங்கை
Typography

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது போல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது, கடத்தப்படுவது, தாக்கப்படுவது உள்ளிட்ட அடக்குமுறைகள் தற்போது இடம்பெறாத போதிலும், ஊடகவியலாளர்கள் மீது அரசாங்கம் அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுடனான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிப்படையாக ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் விமர்சித்தும் அச்சுறுத்தியும் வருவதாக குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகள் நிறைவு செய்யப்படாமல் நீடித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அநுர குமார திசாநாயக்க மேற்கண்டாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது  “லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட உட்பட 26  ஊடகவியலாளர்களும், பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை.

பிரதமரும், ஜனாதிபதியும் ஊடகங்களை விமர்சித்தும் அச்சுறுத்தல் செய்தும் வருகின்றனர். ஊடகங்கள் தொடர்பில் எமக்கு விமர்சனம் உள்ளது. இன்று வெள்ளை வான் கடத்தல் இல்லாத போதும் வேறு வழியில் ஊடக அடக்குமுறை முன்னெடுக்கப்படுகிறது. நாடு பற்றி ஊடகங்களை விட ஆட்சியாளர்களுக்கே கரிசனை இருக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ சமூக, கலாசார நிலையம் அமைப்பதற்கென்று கூறி பெற்ற காணி சி.எஸ்.என். அலைவரிசைக்கு மோசடியாக வழங்கப்பட்டது. இதனை நிர்வகிக்க அரச அனுசரணை வழங்கப்பட்டது. ஆனால் வேறு நோக்கிலே இந்த அலைவரிசை அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. தனியார் துறைக்கு வழங்கிய 2500 சம்பள உயர்வு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. பிரதேச ஊடகவியலாளர்கள், இன்டர்நெட் வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றுள்ளார். 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS