இலங்கை
Typography

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்துக்கு மேலதிகமாக அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும், வருகைக் கொடுப்பனவாக 2,500 ரூபாவும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக முன்வைத்த அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைவாக அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக பெற்றோலியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சந்திம வீரக்கொடி கூறியுள்ளதாவது, “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இது தவிர உறுப்பினர்களின் பாராளுமன்ற வருகைக்காக நாளொன்றுக்கான கொடுப்பனவை 500 ரூபாவில் இருந்து 2500 ரூபாவாக அதிகரிக்கவும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது

இந்த அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய வசதிகள் அவசியம். சில உறுப்பினர்கள் தமது சொந்தக் கட்டிடத்தில் அலுவலகம் வைத்துள்ளனர். ஆனால் அலுவலகத்தை நிர்வகிக்கவும் செயற்படுத்தவும் செலவிட வேண்டும். சில வேளை ஆதரவாளர்கள் அலுவலகம் தந்து உதவுவர். ஆனால், அங்கிருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதில் சிக்கல் ஏற்படும்.” என்றுள்ளார்.

இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் நடத்தவும், திருமண மற்றும் மரண வீடுகளுக்கு செல்கையிலும் அன்பளிப்பு வழங்கவும் அவர்களுக்கு பணம் தேவை என்பதால் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்க இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS