இலங்கை
Typography

தமிழ் பெயரை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை  அனுமதிக்க முடியாது. எனவே, வகித்துவரும் மீள்குடியேற்றத்துறை அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

டி.எம்.சுவாமிநாதன் வேறு ஏதாவது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டு, தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கக் கூடிய மாற்று இனத்தவரிடம் மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியை கையளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு மீதான வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “13வது திருத்தச்சட்டமானது தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் போதிய தீர்வினைக் கொண்டிருப்பதாக அண்மையில் நடந்த கூட்டமொன்றில் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருந்தார். இதனைக் கூறுவதற்கு அவருக்கு என்ன தைரியம் உள்ளது? இதனைச் சொல்வதற்கு அவர் யார்? மக்கள் உங்களைத் தெரிவுசெய்தார்களா இங்கு வந்து இப்படிக் கூறுவதற்கு.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அப்படியாயின் ஏன் நாம் புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும். இவ்வாறான கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும். சமூகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்பை நீங்கள் உணரவில்லை.

வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறது என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். அந்த அரசியல் காரணங்கள் என்ன என்பதை கூறுமாறு சவால் விடுக்கின்றோம். 

அமைச்சர் டி.எம்.சுமாமிநாதன் மீது நம்பிக்கை இல்லையென கடந்த வரவு-செலவுத் திட்டத்தின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். இது இம்முறை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS