இலங்கை
Typography

வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் பேச்சு நடத்தியே இறுதித் தீர்வு எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளோம். வடக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான பிரச்சினையும் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சு மீதான ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இவ்விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய பின்னர், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது குறுக்கிட்டுப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் கருத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கேள்விகளை முன்வைத்தார். இதனால் சபையில் சில நிமிடங்கள் கடுமையான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

பிரதமர் கூறுகையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தற்பொழுது சமாதான சூழலில் சுதந்திரமாக நடமாடக்கூடியதாகவுள்ளது. அது மாத்திரமன்றி பாராளுமன்றத்திலும் அமைச்சர்களுக்கு எதிராக தர்க்கத்தில் ஈடுபட முடியும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக எவராவது கூச்சலிட்டால் அவர் பாராளுமன்றத்தில் இருக்கமாட்டார். ரவிராஜூக்கு என்ன நடந்தது? ஆனால் இந்த நிலைமை தற்பொழுது இல்லை. 

இரு தரப்புக்களையும் சந்தித்து பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருப்பதுடன், வடக்கின் அபிவிருத்திக்கு கூடுதல் பணத்தை வழங்கவும் தீர்மானித்துள்ளோம். அபிவிருத்தி தொடர்பில் வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்குமிடையில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன. எனினும், இந்த அபிப்பிராய பேதங்களை நாம் குண்டுகளைப் பயன்படுத்தாது தீர்த்துவைப்போம்” என்றார்.

பிரதமரின் கருத்தைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமரிடம் கேள்வியொன்றை முன்வைத்தார். “எமது மக்கள் நீண்டகாலமாக கஷ்டங்களை எதிர்கொண்டவர்கள். யுத்தத்தால் அவர்களின் வீடுகள் இழக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக நீடித்திருக்கக் கூடிய நிரந்தர வீடுகளே தேவையாக உள்ளது” என்றுள்ளார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS