இலங்கை
Typography

ஈக்குவடோரிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பல் ஒன்றிலிருந்து சுமார் 1200 கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 800 கிலோ கிராம் கொகெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.  

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தக் கப்பலில் கொகெய்ன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஈக்குவடோர் நாட்டிலிருந்து வந்துள்ள இந்தக் கப்பல் இந்தியா நோக்கி செல்லவிருந்ததாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கப்பலில் கொகெய்ன் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி கப்பல் பரிசோதனை செய்யப்பட்டதாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.

தெற்காசியாவில் இதுவரை இவ்வளவு தொகை கொகெய்ன் முதல் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சுற்றிவளைப்பில் கடற்படையினர் மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சம்பந்தப்பட்ட கப்பல் கொழும்பு கடற்பரப்பிற்குள் நுழைந்த போது கைதுசெய்யப்பட்டது. 

கப்பலிலிருந்த கொள்கலனை சோதனையிட்டபோது, பலகை அடுக்குகளுக்குள் மறைக்கப்பட்ட போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் போதைப்பொருளின் பெறுமதி 1200 கோடி ரூபாயாகும் என போதைப் பொருள் ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் போதைப் பொருள் இந்தியாவிலுள்ள பேருட்டிம்பர் எனும் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி கப்பல் கடந்த ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஈக்குவாடோரிலிருந்து புறப்பட்டு பெல்ஜியத்தை வந்தடைந்துள்ளது. அந்த துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இந்தியாவுக்குச் சென்று பலகைகள் நிரப்பிய இரண்டு கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்று அதன் பிறகு இந்தியாவிற்கு செல்வதற்காக இலங்கைத் துறைமுகத்தினூடாக பயணித்துள்ளது. இந்தக் கப்பலில் இருந்துள்ள 600 கொள்கலன்களிலிருந்து போதைப்பொருளடங்கிய இந்தக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈக்குவடோரிலிருந்து நேரடியாக இந்தியாவுக்குக் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் பெல்ஜியம், சவூதி அரேபியாவுக்கூடாக சென்று அதன் பிறகு இலங்கையூடாக இந்தியா செல்வதற்கு தீர்மானித்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்தியாவின் குஜராத்திலுள்ள முன்றா துறைமுகத்திற்கு இந்தக் கப்பல் செல்லவிருந்தது. சவூதி அரேபியாவிலுள்ள கிங் அப்துல்லா துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டுள்ளது. கப்பல் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் கப்பல் கப்டன் உள்ளிட்ட மாலுமிகள் இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்