இலங்கை
Typography

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிரந்த வீடுகளை வழங்கக் கோரியும், பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டும் எதிர்வரும் 19ஆம் திகதி (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடைய நிதிப்பங்களிப்புடன் நிரந்தர வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும், கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் 13,000 வரையான குடும்பங்கள், இதுவரை நிரந்தர வீடுகள் இன்றி கடந்த ஏழு ஆண்டுகளாக  தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

மீள்குடியேற்ற அமைச்சினால் தற்போது 65,000 பொருத்து வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான பொருத்து வீடுகள், எமது சூழலுக்கு பொருந்தாது என்றும் முன்னர் வழங்கப்பட்டது போன்ற நிரந்தர வீட்டுத்திட்டங்களை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில்,  மீள்குடியேற்ற பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து, திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளன. இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்களை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்