இலங்கை
Typography

தாய் நாட்டினை தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவினதும் சீனாவினதும் இந்தியாவினதும் கொலணியாக மாற்றியுள்ளது என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். 

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளதாவது, “2020ஆம் ஆண்டளவில் இந்த நாடு எலும்புத்துண்டாகவே மாறிவிடும். இலங்கை சர்வதேச போர்த் தலமாக மாறிவிடும். ஒரு புறத்தில் பலாலியும், சம்பூர் பகுதியும் இந்தியாவிற்கும். மறுபுறத்தில் திருகோணமலை அமெரிக்காவிற்கும் வழங்கப்படுகிறது. முன்னைய ஆட்சியின்போது தேர்தல் காலங்களில் இந்த அரசாங்கத்திற்கு மேலும் 5 ஆண்டுகளைக் கொடுத்தால் சீனாவின் கொலனியாக இலங்கையை மாற்றிவிடுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். 

இன்று சீனாவின் கொலனியாக இந்த நாட்டை மாற்றியமைப்பது யார்? இங்கு சீனாவின் கொலனியும், அங்கு அமெரிக்காவின் கொலனியும், மற்றைய இடத்தில் இந்தியாவின் கொலனியாகவும் மாற்றி இந்த நாட்டை விளையாட்டுத் திடலாக மாற்றி இளைஞர்களை மீண்டும் ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது நல்லாட்சி அரசாங்கம்.

விசேடமாக புதிய அரசியலமைப்பு தொடர்பில் புதுமையான அவசரம் நிலவிவருகிறது. 09,10,11ஆம் திகதிகளில் அறிக்கைகளை சமர்ப்பித்து பேசவிருக்கின்றனர். ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி புதிய அரசியலமைப்பை நிறைவுசெய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

தமது பகுதிகளிலுள்ள பிரதிநிதிகளை சந்தித்து இந்த கேடுநிறைந்த அரசியலமைப்பிற்கு ஆதரவாக கை உயர்த்த வேண்டாம். அவ்வாறு உயர்த்தினால் பிரதேசங்களுக்கு வர இடமளிக்க மாட்டோம் என்பதை இந்த நாட்டு மக்கள் கூற வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றோம்” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS