இலங்கை
Typography

2016ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தளவில் மற்றொரு முக்கியமான ஆண்டாக இருந்தது. புதிய அரசாங்கம் பதவியேற்று தன்னுடைய இரண்டாவது ஆண்டில் காலடி வைத்து தொடக்கம், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் விஜயத்தினை மேற்கொண்டது வரையில் நிகழ்ந்தது. 

அதுபோல, அரசியல் உரிமைகளை வலியுறுத்தி ‘எழுக தமிழ்’ யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது கவனிப்புப் பெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துக்கத்தினையும் ஆற்றாமையினையும் ஏற்படுத்தியது. இனமுரண்பாடுகளுக்கான தீர்வு பற்றிய நம்பிக்கைகளை பொய்த்துப் போகவும் செய்தது.

இவ்வாறாக, 2016 தன்னுடைய இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது. அப்படியான தருணத்தில் முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், விடயங்கள் தொடர்பிலான தொகுப்பு இது: ஆசிரியர் குழு, 4TamilMedia

ஜனவரி 15

‘காணாமற்போனோர் உயிரோடு இல்லை’

ஆயுத மோதல் காலத்தில் காணாமற்போனோரில் பெரும்பாலானோர் உயிரிழிந்துவிட்டனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

பெப்ரவரி 04

‘தமிழில் தேசிய கீதம்’

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. சுதந்திர தின நிகழ்வின் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும், இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.

பெப்ரவரி 06

‘நான் அனைத்தையும் செவிமடுப்பேன்’

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை வருகை. இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்களின் கருத்துக்களை செவிமடுக்கவுள்ளதாக அவர் அறிவிப்பு.

பெப்ரவரி 15

‘வடக்கு அபிவிருத்திக்கு மூன்று இலட்சம் கோடி தேவை’

வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் மூன்று இலட்சம் (300,000) கோடி ரூபாய்கள் தேவைப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

மார்ச் 09

‘பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றம்’

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணைக்கு எவரும் வாக்கெடுப்புக் கோராததால் திருத்தங்களுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மார்ச் 10

‘நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்’

நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன், ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31வது அமர்வில் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் நிலைத்திருக்கக் கூடிய சமாதானம் என்பவற்றை நிறைவேற்றுவதற்கான சுய பயணத்தை நோக்கி இலங்கை செல்வது மதிக்கப்படவேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 16

‘தம்பி பிரபாகரனை பல தடவைகள் சந்தித்துள்ளேன்’

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தினை அரசியல் பலமாக மாற்றுமாறு தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் தான் பலமுறை கோரிக்கை விடுத்தேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஏப்ரல் 22

‘நாம் பிரிந்து செல்ல விரும்பவில்லை; தனித்துவத்துடன் வாழ விரும்புகின்றோம்’

நாட்டை பிரிந்துக் கொண்டு செல்வதற்கு நாம் விரும்பவில்லை. மாறாக, எமது தனித்துவத்தை பேணிக்கொண்டு வாழவே விரும்புகின்றோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைவின் இறுதி வடிவத்தை சபையில் சமர்பித்து உரையாற்றும் போது தெரிவித்தார்.

மே 05

‘அரசியலமைப்புப் பேரவை உப குழுக்கள் நியமனம்’

பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட பின்னணியில், 66 உறுப்பினர்களைக் கொண்ட 6 உப குழுக்கள் நியமிக்கப்பட்டது. இந்த உப குழுக்களில் 14 தமிழர்கள், 6 முஸ்லிம்கள் என சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மே 16

‘எமது சகோதரர்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றியைக் கொண்டாட முடியாது’

ஆயுத மோதல்களில் எமது சகோதரர்களான தமிழ் மக்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றியைக் கொண்டாட முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு.

“தமிழீழ விடுதலைப் புலிகள் என்றாலும் அவர்களும் இலங்கையர்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. சிங்களவர்களின் போர் வெற்றி விழா என்று கூறி தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி அவர்களை ஓரங்கட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும்“ என்றும் அவர் தெரிவிப்பு.

மே 18

‘சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்’

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றம்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தல்.

யூன் 05

‘கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் தீ’

கொழும்பு, அவிசாவளைக்கு அண்மித்த கொஸ்கம - சலாவ பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றின் ஆயுதக் கிடங்கில் மாலை 06.00 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து, இராணுவத்துக்கு பெரும் சொத்து இழப்பை ஏற்படுத்தியது.

யூன் 13

‘நீதியை நிலைநாட்டும் போது சகல இலங்கையரும் உள்வாங்கப்பட வேண்டும்’

இடைமாற்ற கால நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் இலங்கை வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும்போது “சகல இலங்கையரும் உள்ளடக்கப்படுவதுடன், அவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்“ என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யூலை 02

‘மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி’

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி, பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

யூலை 28

‘கூட்டு எதிரணியின் பேரணி ஆரம்பம்’

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய பேரணி கண்டி - பேராதனை பாலத்திற்கு அருகில் இருந்து ஆரம்பம். மக்கள் விரோத செயற்திட்டங்களில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியே, அதற்கு எதிராக கூட்டு எதிரணி பேரணியை ஆரம்பித்துள்ளது.

ஆகஸ்ட் 03

‘தகவலறியும் சட்டமூலம்’

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் (அடிப்படை உரிமை தொடர்பான) சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திட்டார். இதன்மூலம் குறித்த சட்டமூலம் நடைமுறைக்கு வருவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 14

‘இலங்கை- இந்தியாவுக்கு இடையே பாலம் அவசியமில்லை’

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் தேவையேதும் இல்லை என்றும், அது தொடர்பில் பேச்சுக்கள் ஏதும் இடம்பெறவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு.

ஆகஸ்ட் 17

‘ஆஸியை தோற்கடித்தது இலங்கை’

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ‘முரளி- வோர்ன்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3:0 என்ற கணக்கில் இலங்கை வெற்றி கொண்டது.

ஆகஸ்ட் 31

‘பான் கீ மூன் வருகை’

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு மாலை 07.00 மணியளவில் வந்தார். அவர், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திந்தார்.

செப்டெம்பர் 08

‘துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை’

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

செப்டெம்பர் 24

‘எழுக தமிழ் பேரணி’

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துக் கூறும் நோக்கில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்ட எழுக தமிழ் பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.

ஒக்டோபர் 16

‘மைத்திரி- மோடி சந்திப்பு’

இந்தியாவின் கோவாவில் ஆரம்பமாகியுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு.

ஒக்டோபர் 20

‘யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை’

யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன் (வயது 23), பவுண்ராஜ் சுலக்ஷன் (வயது 24) ஆகியோர் பொலிஸாரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

நவம்பர் 03

‘பண்டித் அமரதேவ மறைவு’

சிங்கள சாஷ்திரிய சங்கீதத்தின் பிதாமகர்களில் ஒருவரான ‘பண்டித்’ டபிள்யூ.டி.அமரதேவ மறைவு.

நவம்பர் 27

‘மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி’

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு. வடக்கு- கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட மக்கள் தீபங்களை ஏற்றி அஞ்சலி

டிசம்பர் 05

‘அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதி- மைத்திரி பேச்சு’

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு தொலைபேசியில் உரையாடினார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.

டிசம்பர் 06

‘யாழ். பொது நூலகம் எரிப்புக்கு ரணில் மன்னிப்புக் கோரல்’

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரினார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த தருணம், அதாவது 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது.

டிசம்பர் 10

‘வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றம்’

2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 110 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 165 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்