இலங்கை
Typography

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதனை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

ஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதுபோல், கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசமான உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து காத்திரமான, சுயாதீன உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற விடயத்தில் சகல அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஒருமைப்பாடு தோன்றியிருப்பதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

திரேசா மே பிரித்தானியப் பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள மங்கள சமரவீர, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சனை நேற்றுமுன்தினம் புதன்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருந்தார்.

நேற்று வியாழக்கிழமை இலண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் சர்வதேச இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் மத்தியில் உரையாற்றிய அவர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவது போல், நூற்றுக்கு நூறுவீதம் இல்லாவிட்டாலும், அரசாங்கம் மனித உரிமை நிலைமைகள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் தீர்மானத்திற்கு இலங்கை இணையனுசரணை வழங்கியமைக்கு, கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை மீள்பார்வை செய்து, தவறுகளைக் களைந்து, இனங்களுக்களுக்கிடையே உண்மையான நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் கொண்டு வரவேண்டும் என்ற அரசின் இதயசுத்தியான நிலைப்பாடே காரணம்.

ஆனாலும், ஐக்கிய நாடுகள் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய சரத்தான, வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், விசாரணையாளார்கள் போன்றோரை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி அதனூடாக போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றவிடயத்தில் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதுபோல், கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசமான உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து காத்திரமான, சுயாதீன உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற விடயத்தில் சகல அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஒருமைப்பாடு தோன்றியிருக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளே இதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு எந்தளவில், எந்த மட்டத்தில் இருக்கவேண்டும் என்பது குறித்தே தற்போது அரசாங்கம் சகல தரப்புடனும் தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றனது. பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு பொறிமுறை விரைவில் ஏற்படுத்தப்படும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்