இலங்கை
Typography

எத்தகைய பேதமுமின்றி ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானது’ என்ற கொள்கையை நடைமுறைபடுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்போடு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

மூதூரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மூதூர் மாவட்ட நீதிமன்றத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “இந்நாட்டின் 62 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்த போது, எதிர்பார்த்த முக்கிய விடயங்களில் சுயாதீனமானதும் பாரபட்சமற்றதும் நடுநிலையானதுமான சட்ட முறைமையை நாட்டில் கட்டியெழுப்புவது முதன்மையானதாகும். அதற்காக நான் அதிகூடிய கடப்பாட்டுடன் உள்ளேன்.

 

சட்டத் தீர்வுகளைத் தேடிவரும் பொது மக்களுக்கு அத்தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதம் எல்லோருடையதும் உடனடி கவனத்தைப் பெறவேண்டிய ஒரு விடயம். அக்கால தாமதத்தை தவிர்ப்பதற்காக அரசாங்கத்தினால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்குமாறு நான், பிரதம நீதியரசர் உள்ளிட்ட சட்டத் துறையில் உள்ள எல்லோரிடமும் விடுகின்றேன்.

 

நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதுவும் அவ்விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலேயாகும்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS