இலங்கை
Typography

வடக்கு மாகாண சகோதரர்கள், 1950, 1960களில் மொழி உரிமைகளை மாத்திரமே கோரினார்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அந்தச் சிறிய பிரச்சினையைத் தீர்க்காது பிரச்சினையை பெருப்பித்துவிட்டன என்று  உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

நாடெங்கிலும் 3100 கிலோமீற்றர் பிரதேச வீதிகளை திருத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பொலனறுவையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது,  “நகக்கண்ணால் கிள்ளியெடுக்கும் பிரச்சினையை இன்று மிகப்பெரிய யுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். 1950, 60களில் எமது வட மாகாண சகோதரர்கள் மொழி உரிமையை மாத்திரமே கோரியிருந்தனர். வேறு எதனையும் கேட்கவில்லை. எனினும் அந்த உரிமையை வழங்க இரண்டு பிரதான கட்சிகளும் தவறின. அந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இழுத்துக் கொண்டு வந்ததால் 30 வருடங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். 

1950களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நம் உலக வங்கியை நாடவில்லை. எம்மிடம் நிதியிருந்தது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விட்டதால் யுத்தம் ஒன்று ஏற்பட்டு நாடு பின்னடைவுக்குச் சென்றது. ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி வருகின்றனர். 

இந்த யாப்பின் ஊடாக சிங்கள மக்களுக்கோ, பௌத்த மதத்திற்கோ நாட்டின் இறைமைக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்டப்போவது இல்லை. வடக்கில் பேரினவாத சிந்தனையுடன் செயற்பட்டவர்கள் இன்று நடுநிலையான கொள்கைக்கு திரும்பியுள்ளனர். தனிநாடு தொடர்பிலான கொள்கையில் இருந்த தாம் விடுபட்டுள்ளனர் வட பகுதியில் செயற்படும் அமைப்புகள், கல்வியாளர்கள, புத்திஜீவிகள் எமக்கு சாட்சியமளித்துள்ளனர். 'சமஷ்டி' தொடர்பிலேனும் கதைப்பதில்லை. அவர்கள் மாகாண சபையை சக்திமிக்கதாக மாற்றியமைக்குமாறு கோருகின்றனர். அதற்கு மக்களது ஆதரவு எமக்குத் தேவை.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்