இலங்கை
Typography

முல்லைத்தீவு கேப்பாபுலவில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணிகளையும், வற்றாப்பளை- புதுக்குடியிருப்பு பிரதான வீதியையும் விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளில் இராணுவம் தமது முகாம்களையும் கட்டடங்களையும் அமைத்துள்ளது. அவற்றை அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், பாதுகாப்பு முக்கியஸ்தர்களுடனும் மீண்டும் உரையாட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் கடந்த திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக முதலாவது கூட்டம் முல்லைத்தீவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமான கூட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. இதன் பின்னர், கேப்பாபுலவுக் காணிகளை நேரில் சென்று அடையாளப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது.

இவற்றில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது, “மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், படைத் தரப்பினர் மக்களுக்கு மாற்றுக் காணி வழங்குவது தொடர்பாகவும் நட்டஈடு கொடுப்பது பற்றியும் பேசினர். இதனை மக்களும், நாங்களும் எதிர்த்தோம். இதனைப் பற்றிப் பேசக் கூட்டம் கூட்டப்படவில்லை என்பதையும் அவர்களுக்கு அழுத்தி உரைத்தோம்.

இதன் பின்னர் கேப்பாபுலவில் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டோம். மக்கள் தங்கள் காணிகள் அடையாளம் தெரியாதவாறு உருமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினர். வற்றாப்பளை - புதுக்குடியிருப்பு முதன்மை வீதியின் இடது பக்கத்தில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியை விடுவிக்கத் தீர்மானித்திருப்பதாகப் படைத் தரப்பினர் கூறினர்.

அந்தக் காணியில் உள்ள இராணுவத் தளபாடங்களை இடமாற்றுவதற்குக் காலம் தேவைப்படுவதாகவும் விரைவில் அதனை விடுவிப்பதாகவும் குறிப்பிட்டனர். அந்தக் காணிகளுக்குள் சென்று பார்வையிடவில்லை.

வீதியின் மறுபுறத்தில், பாதுகாப்புத் தரப்பினரின் பிரதான முகாம் அமைந்துள்ளது. அதற்குள்ளே மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றை விடுவிப்பது தொடர்பில், அடுத்த மட்டத்திலேயே பேச வேண்டியுள்ளது. முகாமுக்குள் முடக்கப்பட்டுள்ள வற்றாப்பளை - புதுக்குடியிருப்பு வீதியும் விடுவிக்கப்படும்.” என்றுள்ளார்.

இந்தச் சந்திப்புக்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்